திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.36 திருக்காளத்தி
பண் - கொல்லி
சந்தமார் அகிலொடு சாதிதேக் கம்மரம்
உந்துமா முகலியின் கரையினில் உமையொடும்
மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி
எந்தையார் இணையடி யென்மனத் துள்ளவே.
1
ஆலமா மரவமோ டமைந்தசீர்ச் சந்தனஞ்
சாலமா பீலியுஞ் சண்பக முந்தியே
காலமார் முகலிவந் தணைதரு காளத்தி
நீலமார் கண்டனை நினையுமா நினைவதே.
2
கோங்கமே குரவமே கொன்றையம் பாதிரி
மூங்கில்வந் தணைதரு முகலியின் கரையினில்
ஆங்கமர் காளத்தி யடிகளை அடிதொழ
வீங்குவெந் துயர்கெடும் வீடெளி தாகுமே.
3
கரும்புதேன் கட்டியுங் கதலியின் கனிகளும்
அரும்புநீர் முகலியின் கரையினி லணிமதி
ஒருங்குவார் சடையினை காளத்தி யொருவனை
விரும்புவா ரவர்கள்தாம் விண்ணுல காள்வரே.
4
வரைதரும் அகிலொடு மாமுத்தம் உந்தியே
திரைதரு முகலியின் கரையினில் தேமலர்
விரைதரு சடைமுடிக் காளத்தி விண்ணவன்
நிரைதரு கழலிணை நித்தலும் நினைமினே.
5
இப்பதிகத்தில் ஆறாம் செய்யுள் மறைந்து போயிற்று.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் மறைந்து போயிற்று.
7
முத்துமா மணிகளும் முழுமலர்த் திரள்களும்
எத்துமா முகலியின் கரையினில் எழில்பெறக்
கத்திட அரக்கனைக் கால்விரல் ஊன்றிய
அத்தன்றன் காளத்தி அணைவது கருமமே.
8
மண்ணுமா வேங்கையும் மருதுகள் பீழ்ந்துந்தி
நண்ணுமா முகலியின் கரையினில் நன்மைசேர்
வண்ணமா மலரவன் மாலவன் காண்கிலா
அண்ணலார் காளத்தி ஆங்கணைந் துய்ம்மினே.
9
வீங்கிய உடலினர் விரிதரு துவருடைப்
பாங்கிலார் சொலைவிடும் பரனடி பணியுமின்
ஓங்குவண் காளத்தி யுள்ளமோ டுணர்தர
வாங்கிடும் வினைகளை வானவர்க் கொருவனே.
10
அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி
வட்டவார் சடையனை வயலணி காழியான்
சிட்டநான் மறைவல ஞானசம் பந்தன்சொல்
இட்டமாப் பாடுவார்க் கில்லையாம் பாவமே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.69 திருக்காளத்தி - திருவிராகம்
பண் - சாதாரி
வானவர்கள் தானவர்கள் வாதைபட
    வந்ததொரு மாகடல்விடந்
தானமுது செய்தருள் புரிந்தசிவன்
    மேவுமலை தன்னைவினவில்
ஏனமின மானினொடு கிள்ளைதினை
    கொள்ளஎழி லார்க்கவணினாற்
கானவர்தம் மாமகளிர் கனகமணி
    விலகுகா ளத்திமலையே.
1
முதசினவில் அவுணர்புரம் மூன்றுமொரு
    நொடிவரையின் மூளவெரிசெய்
சதுரர்மதி பொதிசடையர் சங்கரர்
    விரும்புமலை தன்னைவினவில்
எதிரெதிர வெதிர்பிணைய எழுபொறிகள்
    சிதறஎழி லேனமுழுத
கதிர்மணியின் வளரொளிகள் இருளகல
    நிலவுகா ளத்திமலையே.
2
வல்லைவரு காளியைவ குத்துவலி
    யாகிமிகு தாருகனைநீ
கொல்லென விடுத்தருள் புரிந்தசிவன்
    மேவுமலை கூறிவினவில்
பல்பல இருங்கனி (*)பருங்கிமிக
    வுண்டவை நெருங்கியினமாய்க்
கல்லதிர நின்றுகரு மந்திவிளை
    யாடுகா ளத்திமலையே.

(*) பருகி எனச்சொல்வது விகாரவகையாற் பருங்கியென நின்றது.
3
வேயனைய தோளுமையோர் பாகமது
    வாகவிடை யேறிசடைமேற்
தூயமதி சூடிசுட காடில்நட
    மாடிமலை தன்னைவினவில்
வாய்கலச மாகவழி பாடுசெயும்
    வேடன்மல ராகுநயனங்
காய்கணையி னாலிடந் தீசனடி
    கூடுகா ளத்திமலையே.
4
மலையின்மிசை தனில்முகில்போல் வருவதொரு
    மதகரியை மழைபோலலறக்
கொலைசெய்துமை யஞ்சவுரி போர்த்தசிவன்
    மேவுமலை கூறிவினவில்
அலைகொள்புனல் அருவிபல சுனைகள்வழி
    யிழியவயல் நிலவுமுதுவேய்
கலகலென வொளிகொள்கதிர் முத்தமவை
    சிந்துகா ளத்திமலையே.
5
பாரகம் விளங்கிய பகீரதன்
    அருந்தவம் முயன்றபணிகண்
டாரருள் புரிந்தலைகொள் கங்கைசடை
    யேற்றஅரன் மலையைவினவில்
வாரதர் இருங்குறவர் சேவலின்
    மடுத்தவர் எரித்தவிறகிற்
காரகில் இரும்புகை விசும்புகமழ்
    கின்றகா ளத்திமலையே.
6
ஆரமெதி ராதவலி யாகியச
    லந்தரனை யாழியதனால்
ஈரும்வகை செய்தருள் புரிந்தவன்
    இருந்தமலை தன்னைவினவில்
ஊரம்அர வம்மொளிகொள் மாமணியு
    மிழ்ந்தவையு லாவிவரலாற்
காரிருள் கடிந்துகன கம்மெனவி
    ளங்குகா ளத்திமலையே.
7
எரியனைய சுரிமயிர் இராவணனை
    யீடழிய எழில்கொள்விரலாற்
பெரியவரை யூன்றியருள் செய்தசிவன்
    மேவுமலை பெற்றிவினவில்
வரியசிலை வேடுவர்கள் ஆடவர்கள்
    நீடுவரை யூடுவரலாற்
கரியினொடு வரியுழுவை அரியினமும்
    வெருவுகா ளத்திமலையே.
8
எரியனைய சுரிமயிர் இராவணனை
    யீடழிய எழில்கொள்விரலாற்
பெரியவரை யூன்றியருள் செய்தசிவன்
    மேவுமலை பெற்றிவினவில்
வரியசிலை வேடுவர்கள் ஆடவர்கள்
    நீடுவரை யூடுவரலாற்
கரியினொடு வரியுழுவை அரியினமும்
    வெருவுகா ளத்திமலையே.
9
இனதளவி லிவனதடி யிணையுமுடி
    யறிதுமென இகலுமிருவர்
தனதுருவம் அறிவரிய சகலசிவன்
    மேவுமலை தன்னைவினவிற்
புனவர்புன மயிலனைய மாதரொடு
    மைந்தரும ணம்புணரும்நாள்
கனகமென மலர்களணி வேங்கைகள்
    நிலாவுகா ளத்திமலையே.
10
நின்றுகவ ளம்பலகொள் கையரொடு
    மெய்யிலிடு போர்வையவரும்
நன்றியறி யாதவகை நின்றசிவன்
    மேவுமலை நாடிவினவிற்
குன்றில்மலி துன்றுபொழில் நின்றகுளிர்
    சந்தின்முறி தின்றுகலவிக்
கன்றினொடு சென்றுபிடி நின்றுவிளை
    யாடுகா ளத்திமலையே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com